Saturday, October 29, 2011

7-ம் அறிவு - சினிமா விமர்சனம்




7-ம் அறிவு - சினிமா விமர்சனம்





என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நான் ஹாலிவுட் படங்கள் பார்க்கத் துவங்கிய காலத்தில் இருந்து தற்போதுவரையிலான அமெரிக்காவின் பெருமையை பறைசாற்றும்  படங்களில், பெரும்பான்மையான வில்லன், ரஷ்ய நாடு அல்லது ரஷ்ய ராணுவமாகத்தான் இருந்தது-இருந்து வருகிறது.. 

அமெரிக்கா-ரஷ்யா, இடையே எப்போதும் இருந்துவந்த பனிப்போரை மையமாக வைத்து ஹாலிவுட் நன்றாகவே கல்லா கட்டிவிட்டது. அவைகள் சொல்லிச் சொல்லி வளர்த்த அமெரிக்க மக்களில் இளையோர் அன்றளவும் ரஷ்யா என்றாலே தங்களது விரோத நாடு என்பதை உள்வாங்கிக் கொண்டனர். உலகளவில் அமெரிக்காவை வீழ்த்தவே ரஷ்யா தினம்தினம் அல்லல்படுகிறது என்பது போன்ற பிரமையையும் உருவாக்கி வந்தது ஹாலிவுட் சினிமா.

இப்போது அதுபோன்ற தேச பக்தியை முதன்முதலாக நமக்குள் ஊட்ட முனைந்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். சீனா, இந்தியாவை அழிக்கவே நினைக்கிறது என்று இவரது கற்பனையில் உருவான ட்ரீட்மெண்ட்டுக்கு பொட்டு வைத்து பூ வைக்கும்விதமாக, போதி தர்மர் என்னும் தமிழரும் கிடைத்துவிட... அலங்காரம் பண்ணி முடித்துவிட்டார்..!


நிச்சயமாக இந்தப் படம் தமிழின் முதன்மையான திரைப்படமோ, அல்லது காவியமான, உன்னதமான திரைப்படமோ இல்லை. ஆனால் குறிப்பிடத்தக்கத் திரைப்படம். 

முருகதாஸ் போதி தர்மர் பற்றிக் கூறும்வரையில், எனக்கு இவரைப் பற்றித் தெரியாது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். அதன் பின்புதான் அவரைப் பற்றி விக்கிபீடியாவில் படித்துத் தெரிந்து கொண்டேன். சீன அரசும், சீனர்களும் போதி தர்மர் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்த ஒரு தமிழர்(இது ஒரு பெரிய சர்ச்சையில் உள்ளது. இதனை வேறொரு பதிவில் பார்ப்போம்) என்பதை ஒத்துக் கொண்டு அவருக்குரிய கவுரவத்தைக் கொடுத்திருக்கும்போது, இத்தனை நாட்களாக இதனைப் பற்றி தெரிந்தவர்கள் ஏன் வெளியில் சொல்லாமல் இருந்தார்கள் என்று தெரியவில்லை.

தமிழ்ச் சினிமா வர்த்தகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக குங்பூ சண்டை படங்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. குங்பூ ஆஃப் செவன் ஸ்டெப் என்ற திரைப்படமும், ஷாலின் டெம்பிள் என்ற திரைப்படமும் தமிழ்நாட்டில் சக்கை போடு போட்ட திரைப்படங்கள். இவற்றை பார்த்துதான் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் சண்டைக் காட்சிகளில் கொஞ்சம் முனைப்பையும், அக்கறையையும் காட்டினார்கள் நமது இயக்குநர்கள். ஜாக்கிசானின் திரைப்படங்களின் ரிலீஸின்போது கமல், ரஜினிக்கு வரும் கூட்டத்தைப் போல கூட்டம் கூடியதை, தமிழ்த் திரையுலகம் கண்டிருக்கிறது.

இத்தனை நெருங்கிய தொடர்புகள் இருந்தும், இந்த்த் தகவல் மட்டும் இத்தனை நாட்களாக வெளியில் வராமல் இருந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை. 

இப்போது இதனை உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறையோடு போதி தர்மர் பற்றி திரைப்படமெடுக்க முன் வந்த முருகதாஸின் முயற்சிக்கு எனது வந்தனங்கள். வேறு யாராவது எடுத்திருந்தால்கூட போதிதர்மர் இந்த அளவுக்கு தமிழர்கள் மத்தியில் ரீச் ஆகியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த வகையில் முருகதாஸ் வணக்கத்துக்குரியவர்..!

திரைப்படமாக பார்க்கப் போனால் முதல் 20 நிமிடங்களில் எடுத்திருப்பதையே முழுத் திரைப்படமாக உருவாக்கியிருக்கலாம். அதனை இன்றைய காலக்கட்டத்தோடு ஒப்பிட்டு இன்றைய தமிழ்ச் சினிமாவின் வியாபாரத்துக்கும் ஏற்றார்போல் செய்ய முனைந்தது முருகதாஸின் தவறல்ல. ஆனால் படம் முழுமையடையாமல் இருக்கும்போது, இத்திரைப்படம் தமிழ்ச் சினிமாவின் காவியப் படம்.. இதுபோல் எவரும் படம் எடுக்கவில்லை.. கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம் என்றெல்லாம் அவர் பேசியது இப்போது படத்தின் ரிசல்ட்டுக்கே எதிராகப் போய்விட்டது..

இப்படியெல்லாம் பேசாமல், “இது புதுமையான பேக்கிரவுண்ட்டில் வழக்கமான கரம் மசாலா படம்தான்..” என்று அண்ணன் முருகதாஸ் சொல்லிவிட்டுப் போயிருந்தால், இத்தனை சர்ச்சைகள் வந்திருக்காது..! ஓவர்.. படத்துக்கு வருவோம்..!

முதல் 20 நிமிடங்களில் போதி தர்மரின் வாழ்க்கை வரலாறு சொல்லும்போது ஏற்றி வைத்த பெப், அடுத்த சில காட்சிகளிலேயே நமநமத்துப் போய் கீழிறங்கிவிட.. அதற்குப் பிறகு கடைசி 20 நிமிடங்களில் மட்டுமே படத்தில் மனம் லயிக்கிறது. இடைப்பட்ட நேரங்களில் நடப்பதையெல்லாம் நல்ல இயக்கமாக இருந்தும், ஒரு சீரியல் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டியதாகிவிட்டது.. சர்க்கஸ் கலைஞராக வரும் சூர்யாவின் பார்த்தவுடன் காதலிலேயே படம் சாதாரண படமாகிவிட்டது.. முருகதாஸின் உதவியாளர்கள் இதைக் கூடவா எடுத்துச் சொல்லாமல் விட்டார்கள்..!?

போதி தர்மருக்காக சூர்யா மெனக்கெட்டிருக்கிறார் என்றாலும் சண்டைக் காட்சிகளில் கிராபிக்ஸை பயன்படுத்தி அதையும் கொலை செய்திருக்கிறார்கள். முதல் ஒரு வாரத்தில் படம் பார்க்கப் போகும் அத்தனை தமிழ் சினிமா ரசிகர்களும், இதனால் ஏமாறப் போவது நிச்சயம். குங்பூ படங்களும், ஜாக்கிசானும் எதை குங்பூ என்று சொல்லியிருந்தார்களோ, அதுவெல்லாம் இல்லாமலேயே இதுதான் குங்பூ சண்டை என்று சொல்லி முடித்திருக்கிறார் முருகதாஸ். 

சூர்யா போதி தர்மர் கேரக்டரில் அழகாக இருக்கிறார். நஞ்சு கலந்திருக்கும் உணவைக் கையில் எடுத்து சுவைக்கும்போது அவர் முகம் காட்டும் எக்ஸ்பிரஷன்.. இது சூர்யா என்கிறது..! இந்த சூர்யா சண்டையிடும் காட்சிகளும் குங்பூ கலைக்குப் பொருத்தமானதாக இல்லை என்பதால் அகாசய சூரனாகவே காட்சியளிக்கிறார். சர்க்கஸ் சூர்யா வழக்கம்போல காதலிக்க அலையும் பேட்பாயாகவே தெரிகிறார். சர்க்கஸிஸ் செய்திருக்கும் இவருடைய காட்சிகளைத்தான் இப்படி பாராட்டியிருந்தாரா முருகதாஸ்..? ஐயோடா முருகா.. இதைத்தான் சொல்ல முடியும்..!

சர்க்கஸ் சூர்யா சீரியஸாவதை மிக காமெடியாக எடுத்திருக்கிறார்கள்.  அப்போதுதான் தன்னை சர்க்கஸ் வாசலில் இறக்கிவிட்டுச் செல்லும் ஸ்ருதியைப் பற்றி சித்தப்பா சொல்லும் செய்தியைக் கேட்டவுடன் படாரென்று பொங்கியெழுந்து ஸ்ருதியின் வீட்டுக்குச் சென்று கொதிக்கும் அந்தக் காட்சி.. டிவி சீரியல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது..!

ஸ்ருதிக்கு மிக பொருத்தமான அறிமுகம். எதிர்பார்க்கவே இல்லை இத்தனை அழகாக நடிப்பார் என்று.. ஸ்ருதியின் கண்கள் ஏதோ சொல்ல வருவதைத்தான் அவருடைய அறிமுகக் காட்சியில் காட்டியிருக்க வேண்டும். ஆனால் இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் அந்தக் காட்சியில் கோட்டைவிட்டுவிட்டார்கள். 

குளோஸப் காட்சிகளில் வாய்ஸ் மாடுலேஷன் சிறிதளவுகூட மாறாமல், சிந்தாமல், சிதறாமல் இருக்கிறது.. அழகு.. சூர்யாவைவிடவும் அழகாக நடனமாடியிருக்கிறார். கப்பல் மீது ஆடும் அந்த ஒரு ஸ்டெப் போதும் அம்மணிக்கு.. கான்பரன்ஸில் தமிழர்களைப் பற்றி பொங்கியெழும் காட்சியில் ஒரு துளி கண்ணீர்கூட சிந்தாமல் கண்ணீரைத் தேக்கி வைத்த நிலையில் ஸ்ருதியின் நடிப்பு குறிப்பிடத்தக்கது.. ஆடைக் குறைப்பில் அதிகம் அக்கறை காட்டாமல் அவரை நடிக்க வைப்பதிலேயே முருகதாஸ் தீவிரம் காட்டியிருக்கிறார்..!

இந்தியாவையும், இலங்கையும் போட்டுத் தாக்கிவிட்டு, சந்தடிச்சாக்கில் இட ஒதுக்கீட்டின் மீதும் பாய்ந்திருக்கிறார் முருகதாஸ். யாரும் இதை இன்னும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. தப்பித்தார் இயக்குநர். படத்தில் தமிழர்கள் சம்பந்தப்பட்ட வசனத்திலும், இலங்கையை மறைமுகமாகத் தாக்கிய வசனத்திலும், இலங்கை சென்சார் போர்டு கத்திரி போட்டுவிட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..!

சர்க்கஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பிரமிக்க வைக்க எத்தனையோ இருந்தும் ஒளிப்பதிவு மந்தமாக இருந்த்து ஏன் என்று தெரியவில்லை.  சூர்யா, ஸ்ருதியின் பர்ஸை லவட்டும் காட்சிகளிலெல்லாம் கேமிராமேனின் லென்ஸும் லவட்டாகிவிட்டது போலும்.. சில இடங்களில் ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு ஒன்றுமேயில்லை..

போதி தர்மர் சம்பந்தப்பட்ட காட்சிகள், பாடல் காட்சிகள், இறுதிக் காட்சியிலும் மட்டுமே சுழன்று, சுழன்று வேலை பார்த்திருக்கிறார்கள். மற்ற நாட்களில் அசோசியேட் வேலை பார்த்திருப்பாரோ..?

வில்லன் நடிகரான அந்த டோங்லீ. நல்ல தேர்வுதான் ஆனால் அவர் அளவுக்கு சூர்யாவுக்கு குங்பூ தெரியாத்தால் ஹீரோவுக்காக கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறார்..! ஸ்ருதிக்கு உதவிக்கு செய்யும் மாலதி என்ற பெண் நல்ல அழகு. சினிமாவுக்கேற்ற முகம்.. முயன்றால் ஹீரோயினாகலாம்..!

நாய்க்கு ஊசி போட்டு நோயைப் பரப்பும் காட்சிகளின் பிரம்மாண்டம் பயமூட்டுகிறது. இந்தக் காட்சியை விஸ்தாரமாக காட்டினாலும் எடுக்கப்பட்டவிதம் மிக நேர்த்தி..! 

லீ, சூர்யா, ஸ்ருதி விரட்டல் காட்சிகளில் பலவற்றை அடுத்த்து இதுதான் என்பதை தொடர்ச்சியாக சினிமா பார்த்து வருபவர்கள் மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம். நாம் நினைப்பதுதான் ஸ்கிரீனிலும் வருகிறது. நம்மை கெளரவிக்க வேண்டும் என்பதற்காகவே முருகதாஸ் இதைச் செய்திருக்கிறாரோ..? வாழ்க இயக்குநர்..!

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ஆடியோ ரிலீஸின்போதே வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது முன் அந்திச் சாரல் பாடல். படமாக்கப்பட்டவிதமும் பிரெஷ்னஸ்.. அழகு.. பின்னணி இசையில் பல இடங்களில் பரபரப்பை ஊட்டியிருக்கிறார். சில இடங்களில் அதுவே அலங்கோலமாகவும் தெரிகிறது. அடிக்கடி வரும் தீம் மியூஸிக் காதைக் குடைகிறதே தவிர.. வேறு எதையும் செய்யவில்லை..!  

இறுதியில் டோங்லீ வீழ்வார் என்று தியேட்டர் வாட்ச்மேனுக்கே தெரியுமென்பதால் அதிக சுவாரஸ்யமே இல்லாமல் போய்விட்டது சினிமா ரசிகர்களுக்கு.. லாஜிக் மீறலில் இந்தப் படத்தில் செய்திருக்கும் தவறுகளைப் பட்டியலிட்டால் அதை வைத்தே இன்னொரு சினிமா எடுத்துவிடலாம்..! 

ஹிப்டினாசம் முறையிலேயே அனைவரையும் திசை திருப்ப முடியுமெனில், ஸ்ருதியையும், சூர்யாவையும் மடக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அத்தனையையும்விட்டுவிட்டு 16 ரீல்களுக்கு கதையை நகர்த்த வேண்டி இத்தனை அதகளம் செய்திருக்கிறார்கள்.

நோக்கு வர்மக் கலையால், போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே நுழைந்து பல காவலர்களை சாகடித்த பின்பும் அவரைத் தேடாத போலீஸ் என்று சொல்லி தமிழ்நாட்டு போலீஸை மிகவும் கேவலப்படுத்திவிட்டார் முருகதாஸ். இந்தப் படத்தை முருகதாஸின் கேரியரில் மிக முக்கிய படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு போனதற்கு இந்த ஒரு லாஜிக் மீறலையே உதாரணமாகச் சொல்லிவிடலாம்..!  

டோங்லீ இறுதிக் காட்சியில் மரத்தையே தூக்கும் டூ மச்சான ஷாட்டுகள், சர்க்கஸை நிஜமாகவே கோமாளிகளின் கூடாரமாகக் காட்டியது.. 300 கோடி ரூபாயை ஸ்விஸ் வங்கியில் போட்டிருப்பதாக சாதாரண மெயில் மூலம் கண்டுபிடிப்பது.. சூர்யா திடீரென்று தனி டிராக்கில் சென்று பேராசிரியரை கடத்துவது.. சூர்யாவின் குடும்பத்தினரின் வருகையும், ஆன் தி ஸ்பாட்டில் காணாமல் போவதுமாக.. எண்ணற்ற சினிமா விதிமீறல்களை வைத்திருப்பதால் முருகதாஸ் தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த முறை தோற்றுப் போனவராகவே காட்சியளிக்கிறார்..!

நான் முன்பே சொன்னதுபோல சீனா-இந்தியா எதிர்ப்பு என்ற ஒன்றைக் காட்டி இந்திய தேசியத்தைக் கட்டிக் காப்பதற்காக போதி தர்மரின் டி.என்.ஏ. மீண்டும் தோண்டியெடுக்கப்படுகிறது என்று படத்தின் ஒன்லைனை வைத்துவிட்டு, “தமிழர்கள்ன்னா இந்தியாவிலேயும் அடிக்கிறாங்க.. வெளிநாட்டுலேயும் அடிக்கிறாங்க.. எங்க போனாலும் அடி வாங்குறது தமிழர்கள்தான்”னு கொந்தளிக்கிற டயலாக்கை வேறு வைத்திருப்பது இடிக்கிறதே..! 


இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை.  இதையாவது அண்ணன் முருகதாஸ் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளட்டும்..!

நிச்சயம் பார்க்கக் கூடாத, வேண்டாத படமல்ல. அதே சமயம் பார்த்தே தீர வேண்டிய படமும் அல்ல. நேரம் கிடைத்தால் பாருங்கள்..!

படத்தின் டிரெயிலர் :


No comments:

Post a Comment